"வரலாறு போற்றும் நாயகனாய் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்" என்று நாளை தனது 85-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எம். கிருஷ்ணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கை:
இன்றைக்கு நாடும், ஏடும் போற்றும் தலைவர் முத்தமிழறிஞர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரின் 85 ஆம் அகவை அகமகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. டாக்டர் கலைஞரின் மூச்சும், பேச்சும், தமிழ், தமிழர், தமிழகம், இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாடு பற்றியேதான் என்பது வரலாறு. அவரது குழந்தைப் பருவத்திலேயே தமிழ் மொழிக்கும், வாலிப வயதில் தமிழர்க்கும், இன்றைக்கு தமிழக உயர்வுக்கும், இந்திய வளர்ச்சிக்கும் கிஞ்சித்தும் தணியாத உணர்வோடு தளராது தொடர்ந்து கடும் பணியாற்றி வருபவர் அவர்.
தலைவர் கலைஞர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், இலக்கிய ஆய்வாளர், சிந்தனையாளர், சிறந்த பேச்சாளர் என்ற பன்முக ஆற்றல் பெற்ற பேரறிவுப் பெருந்தகை அவர் என்பதையெல்லாம் விட அவர் நட்புக்கு இலக்கணம், மகத்தான மனிதநேயர் என்கிற பண்பால் அவரது புகழ் மேலும் கோபுர கலசமாய் உயர்ந்து ஒளிர்கிறது.
தமிழகத்தின் உயர்வுக்காக, வளர்ச்சிக்காக சேது சமுத்திரத் திட்டத்தை ‘சேதுராம்’ திட்டம் என்று கூட மாற்றிக் கொள்ளலாம். இது எனது பிறந்தநாள் செய்தி என்று நேற்று அவர் அறிவித்துள்ள கருத்து எக்காலத்தும் போற்றப்பட வேண்டிய அற்புதமான பிரகடனம் என்றே சொல்வேன்.
குறிப்பாக ஆன்மீகம் தொடர்பான எனது கொள்கை, என்னுடைய கட்சியின் அடிப்படை நோக்கம் எது என்பதையெல்லாம் விட, தமிழக முன்னேற்றத்திற்கான திட்டங்கள் தான் எனக்கு முக்கியம் என்கிற பொருளைத் தருகிற அவரது பிறந்த நாள் செய்தியை வரலாறு போற்றும்.
இவ்வாறு வரலாற்று நாயகனாய் வாழும் முதலமைச்சர் பூரண நலத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து இந்தியத் திருநாடு மற்றும் தமிழகம் உயர்ந்தோங்கிட, வாழ்வாங்கு வாழ மனமுவந்து வாழ்த்துகிறேன்.