அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களுக்கு ரூ.219.47 கோடி உதவித் தொகை: தமிழக அரசு!
வியாழன், 29 மே 2008 (13:23 IST)
24 மாதங்களில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் 1 கோடியே 85 லட்சத்து 39 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இதுவரை 219.47 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்களை பாதுகாத்திடும் நோக்கில் ஒவ்வொரு வகைத் தொழிலுக்கும் ஒரு நல வாரியம் தொடங்கப்பட்டு அந்த நலவாரியங்களின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் அளிக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர ஊனமுற்றோர் நலவாரியம், பழங்குடியினர் நலவாரியம், சீர்மரபினர் நலவாரியம், தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியம், அரவாணிகள் நலவாரியம், நரிக்குறவர் நலவாரியம் ஆகியவை அமைக்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுகின்றன.
விவசாயத் தொழிலாளர்கள் நலவாரியம், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியம் முதலான பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியங்கள் மூலமும் 13.5.2006ல் அரசு அமைந்த பிறகு 20.0.2008 வரை 24 மாதங்களில் 1 கோடியே 85 லட்சத்து 39 ஆயிரத்து 429 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் 5 லட்சத்துக்கு 55 ஆயிரத்து 907 அமைப்புசாராத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மொத்தம் 219 கோடியே 47 லட்சத்து 9 ஆயிரத்து 123 ரூபாய் பல்வேறு இனங்களின் கீழ் இதுவரை உதவித் தொகைகளாக வழங்கப்பட்டு, அமைப்புசாராத் தொழிலாளர் குடும்பங்களின் நல வாழ்வுக்கும், வளவாழ்வுக்கும் வரலாறு காணா வகையில் உதவிகளை வழங்கி வருகிறது தமிழக அரசு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.