3 மாதத்தில் அரவாணிகளுக்கு அடையாள அட்டை : அமைச்சர் கீதா ஜீவன்!
செவ்வாய், 27 மே 2008 (10:24 IST)
''3 மாதங்களுக்குள் அரவாணிகள் கணக்கெடுப்பை முடித்து, அவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்க முடிவு செய்துள்ளோம்'' என்று சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நேற்று அரவாணிகள் நல வாரிய முதல் கூட்டம் நடந்தது. அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரவாணிகள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இதுவரை அரசிடம் இதற்கான முறையான புள்ளிவிவரங்கள் இல்லை. எனவே அரவாணிகள் பற்றி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்களில் படித்தவர்கள் எவ்வளவு பேர், என்ன தொழில் செய்கிறார்கள் என்பது போன்ற விவரங்கள் இதில் சேகரிக்கப்படும்.
அரவாணிகளுக்காக செயல்படக்கூடிய தொண்டு நிறுவனங்கள் அந்தந்த மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்கள் மூலம் இந்த கணக்கெடுப்பு மாவட்ட வாரியாக நடத்தப்படும். 3 மாதங்களுக்குள் இந்த கணக்கெடுப்பை முடித்து, அவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்க முடிவு செய்துள்ளோம்.
3 மாதங்களுக்கு ஒரு முறை அரவாணிகளுக்கென தனியாக ஒரு குறைதீர் கூட்டம் மாவட்ட வாரியாக கலெக்டர் மூலம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 103 அரவாணிகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் மேம்பாட்டு திட்டம் மூலம் ஏற்கனவே 88 அரவாணிகள் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இப்போது மேலும் அதிக குழுக்களை அமைத்து, சமூக நலத்துறை மூலம் மானியம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.