திருச்சியில் ஜல்லிக்கட்டு: காளை குத்தி 25 பேர் படுகாயம்!
வெள்ளி, 23 மே 2008 (17:54 IST)
திருச்சி அருகே இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளை குத்தி 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருச்சி அருகே உள்ள சிறி ஆண்டிகருப்பன்சாமி கோயில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 500 காளைகள் பங்கேற்றன.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கருமண்டபம் ஜெயபால் மற்றும் தமிழ்நாடு வீர விளையாட்டு சங்க செயலாளர் ஒண்டிராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும், மாவட்ட நிர்வாக அனுமதியுடனும், மதுரை உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு படியே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது என்றனர்.