ரேஷன் அரிசியை யா‌ர் கடத்தினாலு‌ம் நடவடிக்கை: கருணாநிதி!

வெள்ளி, 23 மே 2008 (09:44 IST)
''ரேஷன் அரிசியை கடத்துவோர் யாராக இருந்தாலும் தயக்கம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.

இது தொடர்பாக த‌மிழக அரசு வெளியி‌ட்டு‌ள்ள செய்திக்குறிப்பில், ‌நியாய‌விலை கடைகளில் அடுத்துவரும் மூன்றரை மாத தேவைகளை நிறைவு செய்யும் அளவில் தற்போதைய அரிசி கையிருப்பு போதுமானதாக உள்ளது. கிலோ அரிசி 2 ரூபாய் திட்டத்துக்கு தங்குதடையின்றி அரிசி வழங்கப்பட வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதி அறிவுறுத்தினார்.

கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுபவர் யாராக இருந்தாலும், எவ்வித தயக்கமுமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அரிசி கடத்தலுக்கு உடந்தையாக செயல்படும் பணியாளர்கள் மீதும், மேற்பார்வை செய்ய தவறிய அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் முதலமைச்சர் கருணாநிதி அறிவுரைகள் வழங்கினார்.

கோதுமை, பயறு வகைகள் மீது கட்டுப்பாட்டு ஆணைகள் போடப்பட்டு, பதுக்கல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எண்ணெ‌ய், எ‌ண்ணெ‌ய் ‌வித்துக்கள் மற்றும் அரிசி போன்ற பொருட்களுக்கு இருப்பு வைத்திருப்பதற்கான கட்டுப்பாட்டு ஆணைகள் துரிதமாக வெளியிடப்பட்டு பதுக்கல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் போது எடை குறைவை முழுமையாக அகற்ற அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் மின்னணு தராசு நிறுவும் திட்டத்தை 31.7.2008க்குள் முடித்திட அறிவுறுத்தினார் எ‌ன்று அரசு செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்