ராமர் பாலத்தை வரலாற்று சின்னமாக அறிவிக்க வேண்டும்: அசோக் சிங்கால்!
வெள்ளி, 23 மே 2008 (09:34 IST)
ராமர் பாலத்தை தேசிய வரலாற்று சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் கூறினார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராமரின் வரலாறு பற்றியே மத்திய அரசு சந்தேகம் எழுப்பியது. இதற்கு நாடு முழுவதும் ராம பக்தர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். வால்மீகியின் ராமாயணத்தில், வாழும் மனிதருள் நீதிமான் யார் என்று தான் தொடங்குகிறது. எனவே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மனிதன் பற்றிய வரலாறு இது என்பது தெளிவாகிறது.
ராமர் பாலம் தொடர்பாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது சிறப்பு மிக்க உத்தரவாகும். அந்த இடத்தை ஆய்வு செய்யாமல் மத்திய அரசு எப்படி ஒரு அறிவியல்பூர்வமான அறிக்கை என்று தாக்கல் செய்ய முடியும். எனவே மத்திய அரசின் நிபுணர் குழு அளித்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும்.
மத்திய அரசு ராமர் பாலத்தை இடிக்கும் திட்டத்தை கைவிட்டு, இதனை தேசிய பாரம்பரிய வரலாற்று சின்னமாக அறிவிக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். ஜுன் 15, 16 ஆகிய தேதிகளில் ஹரித்துவாரில் நடைபெறும் மாநாட்டில் ராமர் பாலத்தை வரலாற்று சின்னமாக அறிவிக்கக்கோரி மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் போராட்டம் பற்றி முடிவெடுக்கப்படுகிறது என்று அசோக்சிங்கால் கூறினார்.