தமிழகத்தில் விஷ சாராய சாவுகள் அதிகரித்ததன் எதிரொலியாக, தமிழக மதுவிலக்கு காவல்துறை கூடுதல் டி.ஜி.பி திலகவதி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஷியாம் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் விஷசாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவிலும் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை இரு மாநிலங்களிலும் பலியானவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. தளி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல்துறையினர் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர்.
சாராய விற்பனையை தடுக்க தவறிய தளி காவல்துறை ஆய்வாளராக பொறுப்பு வகித்த அஞ்செட்டி ஆய்வாளர் ஆரோக்கியராஜ், தளி உதவி ஆய்வாளர் கபிலன், தலைமைக் காவலர் ரவி, மதுவிலக்குப் பிரிவு உதவி ஆய்வாளர் செந்தாமரை ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மதுவிலக்குப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி திலகவதி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளார். தீயணைப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ள ஷியாம் சுந்தர், மதுவிலக்குப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.