குடியிருப்புகளை இடிப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம்: தா.பாண்டியன்!
ஞாயிறு, 18 மே 2008 (11:31 IST)
மக்கள் குடியிருந்து வரும் குடியிருப்புகளை பல்வேறு காரணங்களை கூறி இடிப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்லாண்டு காலமாக மக்கள் குடியிருந்து வரும் குடியிருப்புகளை பல்வேறு காரணங்களை கூறி அரசு அதிகாரிகள் இடிக்க தொடங்கியுள்ளனர். ஒருபுறம், தமிழக அரசு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கிய பட்டியலை அவ்வப்போது அறிவித்து வருகிறது. ஆனால் அதே வேளையில், நீதிமன்ற ஆணை ஒன்றைக்காட்டி தமிழ்நாடு முழுவதும், மக்கள் குடியிருக்கும் வீடுகளை இடிக்கும் அட்டூழியமும் தொடருகிறது.
ரியல் எஸ்டேட் தாதாக்கள் இதன் பின்னணியில் உள்ளனரோ என சந்தேகம் எழுகிறது. குடியிருக்கும் வீடுகளை இடித்து மக்களை தெருவில் நிறுத்தும் இந்த காட்டு மிராண்டிப்போக்கை இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
தமிழக அரசின் இக்கொள்கையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும், மாநில அரசு அலுவலகங்கள் முன் மே 19ஆம் தேதி (நாளை) ஆர்ப்பாட்டங்கள் நடத்திட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறைகூவல் விடுக்கிறது. தமிழக அரசு குடியிருப்பு குடிசை இடிப்பு நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும்.
தமிழக அரசு இடிப்பு நடவடிக்கையை கைவிடவில்லை எனில் பாதிப்பிற்குள்ளாகும் மக்களை பாதுகாக்க தீவிர போராட்டங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இறங்கும் என்று தா.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.