மீனவர்கள் முழு உரிமை பெற மத்திய அரசுதான் பொறுப்பு : கனிமொழி!
வியாழன், 15 மே 2008 (10:49 IST)
''மீனவர்களின் அமைதியான வாழ்வுக்கும், அவர்கள் முழு உரிமையைப் பெறவும் மத்திய அரசு தான் பொறுப்பு'' என மாநிலங்களவை தி.மு.க உறுப்பினர் கனிமொழி கூறினார்.
சிறிலங்கா ராணுவத்தால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களிடம் குறைகேட்டபோது கனிமொழி கூறுகையில், பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மாநில அரசு மூலம் நிவாரணம் மட்டுமே அளிக்கமுடியும். இதில், குறைபாடுகள் இருந்தால் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன்.
மீனவர்களின் அமைதியான வாழ்வுக்கும், அவர்கள் முழு உரிமையைப் பெறவும் மத்திய அரசு தான் பொறுப்பு. தமிழக மீனவர்களின் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்தவும், அவர்களின் உரிமைகளை பெற்றுத் தரவும் பிரதமரை சந்திப்போம்.
அப்போது, தோழைமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு மீனவர்களின் கோரிக்கைகளை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்.
சிறிலங்கா ராணுவம் சுட்டதில் பார்வையிழந்த மீனவர் அன்புராஜனுக்கு தமிழக அரசின் சார்பில் தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்படும். குடும்பத் தலைவர்களை இழந்த மீனவ குடும்பங்களின் குழந்தைகள் கல்விக்கு உதவிகள் அளிக்கப்படும் என கனிமொழி தெரிவித்தார்.