சட்டப்பேரவையில் ஒரே நாளில் 31 மசோதா நிறைவேற்றம்!
வியாழன், 15 மே 2008 (09:56 IST)
கடைசி நாளான நேற்று மட்டும் ஒரு நாளில் சட்டப்பேரவையில் 31 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை தள்ளிவைக்கப்பட்டது.
சட்டப் பேரவையின் 8-வது கூட்டத் தொடர் கடந்த மார்ச் 19 ஆம் தேதி தொடங்கியது. மே 14ஆம் தேதி வரை கூட்டம் நடந்தது. மொத்தம் 40 நாட்கள் கூட்டம் நடைபெற்றன. இந்த கூட்டத் தொடரில் 48 சட்டமுன்வடிவுகளில் 45 நிறைவேற்றப்பட்டன.
உறுப்பினர்களின் கேள்விகள், மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஆகியவற்றுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பது வழக்கம். அதன்படி, இந்தக் கூட்டத் தொடரில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 மணி நேரம் 7 நிமிடங்கள் பதிலுரை வழங்கி முதலிடம் வகிக்கிறார்.
இதேபோன்று, கேள்வி நேரத்தின் போது, அதிக வினாக்களுக்கு பதிலளித்து முதலிடம் பெறுகிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு.
சிறப்புக் கவன ஈர்ப்பாக 45 தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று (புதன்கிழமை) மட்டும் 31 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், பேரவைக் கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீர்மானத்தை அவை முன்னவர் அன்பழகன் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.