அரசியல் அரிப்பை தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறார் ஜெயலலிதா : கிருஷ்ணசாமி குற்றச்சாற்று!
திங்கள், 12 மே 2008 (16:18 IST)
''சந்தர்ப்பவாத அரசியல் அறிக்கை மூலம் அரசியல் அரிப்பைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறார் 'ஜெயலலிதா'' என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாற்றியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் விலைவாசியை 15 நாட்களுக்குள் குறைக்கவில்லையென்றால் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தப் போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இவர் கடந்த 2001ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற சில மாதங்களுக்குள் சட்டப்பேரவையின் ஒப்புதலைக்கூட பெறாமல் மக்களின் மிக அத்தியாவசியப் பொருட்களான பால் விலை, பேருந்து, மின்சாரக் கட்டணம் போன்றவைகளில் பல கோடி ரூபாய்க்கு விலையை ஏற்றி அறிவித்து தமிழகத்தில் செயற்கையான விலைவாசியை தன்னிச்சையாக உயர்த்தியவர் ஜெயலலிதா.
அப்படிப்பட்டவர்தான் சாத்தான் வேதம் ஓதுவதைப் போல விலைவாசி உயர்வு குறித்து அறிக்கைவாயிலாக கருத்தை தெரிவித்திருக்கிறார். இன்றைக்கு விலைவாசி உயர்வு என்பது உலகம் தழுவிய பிரச்சனை என்பதை உலகில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் தீவிரமாக கருத்தாய்வு நடத்தி வருகின்றனர். இதை உலகளாவிய ஊடகங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
அதையொட்டி இந்தியாவிலும் இயற்கையாக விலைவாசி வருகிறது என்றும், இன்னும் 15 நாட்களுக்குள் விலைவாசி கட்டுப்பாடுத்தப்படும், எனவே மக்கள் அது குறித்து எவ்வித பீதியும் அடைய வேண்டாம் என்ற உறுதிமொழியையும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தோடு ஜெயலலிதா நாடு தழுவிய போராட்டம் என்று அறிவித்திருக்கிறார். அவரது இந்த சந்தர்ப்பவாத அரசியல் அறிக்கை மூலம் அரசியல் அரிப்பைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறார் என்ற உண்மையை மக்கள் நன்றாக அறிவார்கள் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.