ஈரோடு மாவட்டத்தில் பரவலாக காற்றுடன் மழை!

திங்கள், 12 மே 2008 (14:48 IST)
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் காற்றுடன் கூடிய மழையினால் வாழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி உள்ளனர். தற்போது விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் கரும்பு, நெல், மஞ்சள், வாழை ஆகிய பயிர்கள் அதிகமாக பயிரிட்டுள்ளனர்.

இதில் நெல், மஞ்சள் ஆகிய பயிர்கள் பெரும்பாலான பகுதிகளில் அறுவடை முடிந்துவிட்டது. ஆனால் கரும்பும், வாழையும் மட்டும் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னிமலை, ஊத்துகுளி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், அந்தியூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை அதிகமாக பயிரிட்டுள்ளனர். இந்த பலத்த காற்றின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த வாழை அடியோடு சாய்ந்தது. இதனால் தார் ஒன்று ரூ.150 வரை விற்பனையாகும் வாழை தற்போது ரூ.30 க்கு மட்டுமே வியாபாரிகள் கேட்கின்றனர்.
இதனால் வாழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி கே.ரத்தினசாமி கூறுகை‌யி‌ல், வாழை விவசாயம் என்பது நாள்தோறும் விவசாயி செத்து பிழைப்பதற்கு சமம். வாழை தார் வெட்டி அதற்குறிய பணம் கையில் பெற்றால்தான் நிம்மதி பெருமூச்சே வரும். ஆனால் தற்போது விவசாயிகள் பயப்பதற்கு தகுந்தமாதிரி லட்சக்கணக்கில் பணம் கொடுக்கவேண்டிய வாழைகள் காற்றில் கீழே விழுந்ததால் தற்போது சில ஆயிரங்கள் மட்டும் கையில் கிடைக்கும். இதுவும் ஒரு விபத்துதான். ஆகவே தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்