ஈரோடு அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு 2 பேர் போட்டி!
திங்கள், 12 மே 2008 (14:45 IST)
ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் காணாமல்போன ஆண் குழந்தையை கண்டுபிடித்தவுடன் இந்த குழந்தை என்னுடையது என இரண்டு பேர் போட்டி போடுகின்றனர். இதனால் மரபணு சோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஈரோடு அருகே உள்ள முத்தூரை சேர்ந்தவர் ராமசாமி (28). இவருடைய மனைவி சுந்தரி (25). இவருக்கு கடந்த மாதம் 18ஆம் தேதி ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த இரண்டு நாளில் இந்த குழந்தை காணாமல் போனது யாரோ ஒருவர் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து ஈரோடு நகர காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஈரோடு மாணிக்கம் திரையரங்கத்திற்கு முன் குப்பை பொறுக்கிக்கொண்டிருந்த பாப்பா (35) என்ற பெண்ணிடம் இருந்து திருட்டுபோன ஆண் குழந்தை மீட்கப்பட்டது. இந்த குழந்தை கிடைத்தவுடன் சுந்தரி மற்றும் இன்னொரு பெண் என் குழந்தை என போட்டி போடுகின்றனர்.
இதனால் சென்னையில் குழந்தைக்கு மரப்பணு சோதனை நடத்தி யாருடைய குழந்தை என முடிவு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குழந்தைக்காக போட்டிபோடும் இந்த சம்பவம் இப்பகுதி பெண்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.