ராஜீவ்காந்தியின் நினைவு நாளில் நலிந்த மக்களுக்கும், மாணவர்களுக்கும் நல உதவிகள் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய வரலாற்றில் போற்றுதலுக்குரிய தியாகத் தலைவராய் புகழ் ஓங்கிய ராஜீவ்காந்தியின் 17 ஆம் ஆண்டு நினைவுநாள் மே 21 என்பதை காங்கிரஸ் தோழர்களாகிய தாங்கள் அறிவீர்கள்.
உலகின் விஞ்ஞான யுகத்தில் இன்றைய இந்தியா முன்னணியில் நின்று பெருமை பெற்று நிலைப்பதற்கு ராஜீவ்காந்தி அன்றைக்கு திட்டமிட்டு தொடங்கி வைத்த அற்புதமான விஞ்ஞான தொழில்நுட்ப சாதனைகள் தான் என்பதை உலகறியும்.
மேலும் அவர் நடைமுறைப்படுத்திய பஞ்சாயத்துராஜ் சட்டம் உட்பட அவர் ஆற்றிய பல்வேறு சரித்திர சாதனைகளை மக்களுக்கு நினைவுறுத்தும் வகையிலும் அவரது புகழையும், பெருமையையும் போற்றிடும் முறையிலும் மே 21 அன்று ஆங்காங்கே உள்ள காங்கிரஸ் தோழர்களும், அனைத்து காங்கிரஸ் கிளை மற்றும் சார்பு அமைப்புகளிலும் நினைவுநாள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்து மத வழிபாடுகள், அன்னதானங்கள், தண்ணீர், நீர் மோர் பந்தல்கள், நலிந்த மக்களுக்கும், மாணவர்களுக்கும் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளையும் அவற்றில் இணைத்து நடத்திட வேண்டு மெனவும் அன்புடன் வேண்டுகிறேன் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.