அனைத்து வங்கிகளிலும் ஆன்லைன் மூலம் கல்வி கடன்: ப.சிதம்பரம்!
திங்கள், 12 மே 2008 (17:40 IST)
''நடப்பு ஆண்டு இறுதிக்குள் அனைத்து வங்கிகளிலும் ஆன்லைன் மூலம் கல்வி கடன் வழங்கப்படும்'' என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்சின் புதிய கிளையை திறந்து வைத்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், அரசு பொறுப்பேற்ற முதல் ஆண்டு 83,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. கடந்த ஆண்டு இது 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாக மாற்றப்பட்டது. நடப்பாண்டில் விவசாய கடனாக ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
விவசாய கடன்களை இந்த அரசு ரத்து செய்யாது என்று நம்பி தள்ளுபடி செய்யுங்கள் என்று கூறினார்கள். இப்போது ரத்து செய்யப்பட்ட நிலையில் எப்படி இதை நடைமுறைப்படுத்துவீர்கள் என்று கேட்கிறார்கள். அடுத்த மாதம் 30ஆம் தேதிக்குள் விவசாய கடன்கள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படும்.
இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வு முடிவில் கிராமப்புற மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் பெற்றோரிடம் பணம் இல்லாததால் படிப்பை நிறுத்தாமல் வங்கிகளில் கடன் பெற்று தங்கள் கல்வியை தொடரவேண்டும். கல்வி கடன் பெற நேரடியாக வங்கிகளுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை.
கணினி மூலம் வங்கிகளின் இணையதள முகவரியில் அவர்கள் மனு செய்யலாம். ஒன்று, இரண்டு அல்ல 7, 8 வங்கிகளிலும் ஆன்லைன் மூலம் மனு செய்யலாம். ஒரு சில வங்கிகளில் மட்டும் பின்பற்றப்படும் இந்த நடைமுறை இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வங்கிகளிலும் நடைமுறைபடுத்தப்படும். தகுதி உடையவர்களுக்கு தரமான கல்லூரிகளில் இடம் கிடைத்து விட்டால் அவர்களுக்கு கட்டாயம் கடன் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என சிதம்பரம் கூறினார்.