விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணம்: த.வெள்ளையன்!
திங்கள், 5 மே 2008 (13:21 IST)
''மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே விலைவாசி உயர்வுக்கு காரணம்'' என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையன் குற்றம் சாற்றியுள்ளார்.
சென்னையில் இன்று வணிகர் சங்கத்தின் தலைவர் த.வெள்ளையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒவ்வொரு ஆண்டும் வணிகர் தினத்தையொட்டி வணிகர்கள் மாநாடு நடத்தி வந்தோம். இந்த ஆண்டு விலைவாசி உயர்வு கடுமையாக இருப்பதால் இந்த வெள்ளி விழாவை விலைவாசி உயர்வு எதிர்ப்பு மாநாடாக நடத்துகிறோம்.
மாநாட்டில் விலைவாசி உயர்வை சித்தரிக்கும் வகையில் விலைவாசி அரக்கன் உருவம், காய்கறி மற்றும் பழங்களால் 18 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ளது. மாநாட்டின் நிறைவில் 18 அடி உயர விலைவாசி அரக்கன் ஒருவன் கீழே வீழ்த்தப்பட்டு, சுய தொழில் காப்போம், சுதந்திரம் காப்போம் என்று உறுதிமொழி ஏற்கிறோம்.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைதான் பணவீக்கத்திற்கும், விலைவாசி உயர்வுக்கும் காரணம். இதை அரசியல் கட்சி தலைவர்கள் உணர வேண்டும் என்று த.வெள்ளையன் கூறினார்.