வணிகர் மாநாடு : தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு!
திங்கள், 5 மே 2008 (15:00 IST)
வணிகர் சங்கங்களின் பேரவை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடித்து வரும் வணிகர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
webdunia photo
WD
ஆனால் சென்னையில் தியாகராயா நகரில் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள உஸ்மான் சாலை, பாண்டி பஜார் ஆகிய இடங்களில் அனைத்து கடைகளும் திறந்தே இருந்தன. பல இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டிருந்தன.
வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, பெரம்பூர், திருவொற்றியூர், ராயபுரம், வியாசர்பாடி உள்பட சென்னையின் முக்கிய வியாபார பகுதிகளில் முழு அடைப்பு முழு அளவிற்கு நடந்து வருகிறது. வீதிகள் வெறிச்சோடி கிடந்தன.
சென்னை தீவுத் திடலில் இன்று நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான வணிகர்கள் வந்துள்ளனர். மாநாட்டு அரங்கம், சென்னை கடற்கரை சாலைகளில் மக்கள் கூட்டமும், வாகனங்களும் அதிக அளவில் காணப்படுகின்றன.
மாநாட்டை காலை 10 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேரவை தலைவர் வெள்ளையன் அறிமுக உரையாற்றினார். மாலையில் விலைவாசி உயர்வு கண்டன அரங்கம் நடக்கிறது. வெள்ளையன் தலைமை தாங்குகிறார்.
மாநாட்டில் அகில இந்திய வியாபாரிகள் சம்மேளன தலைவர் ஷியாம் பிகாரி மிஸ்ரா, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் வரதராஜன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி, பா.ஜ.க பொது செயலாளர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பேசுகிறார்கள்.