அரசியலில் அரவாணிகள் ஈடுபட வேண்டும்: கனிமொழி!

திங்கள், 5 மே 2008 (14:45 IST)
''அரசியலில் அரவா‌ணிக‌ள் ஈடுபட முன்வரவேண்டும்'' என்று மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர் கனிமொழி கூ‌றினா‌ர்.

தமிழக அரவாணிகள் சங்கத்தின் சார்பில், அரவாணிகள் நலவாரியம் அமைத்த முதலமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், பீர்க்கன்கரணையில் நடந்தது. விழாவுக்கு கனிமொழி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக் கொண்டு பேசுகை‌யி‌ல், தமிழக முதல்வர் தாய் உள்ளதோடு உங்களுக்கு நலவாரியம் அமைத்து உத்தரவிட்டு உள்ளார். பெண்களுக்கு கொடுமைகள், துன்புறுத்தல்கள் நடக்கின்றன. அவர்களுக்கு வீட்டிற்குள் இந்த தொந்தரவுகள் நடக்கின்றன.

ஆனால் உங்கள் நிலை அப்படி இல்லை. பெற்றோர்களே வீட்டை விட்டு துரத்தி விடுகின்றனர். இதனால் சமுதாயத்தில் உங்களுக்கு கிண்டல், கேலி, துன்புறுத்தல்கள் நடக்கின்றன. கல்வி கற்கவும் முடிவதில்லை. இந்த நிலைகளைப் போக்கத்தான் நலவாரியம் அமைக்கப்பட்டது.

இந்தியா மற்றும் முன்னேறிய நாடுகளிலேயே, தமிழகத்தில் தான் 3-வது பால் இனமாக உங்களை அங்கீகரித்து அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம் நீங்கள் விருப்பம் போல கல்வி கற்க முடியும். அழகுக் கலை, மரு‌த்துவ‌ர், பொறியாளர், கம்ப்யூட்டர் போன்ற துறைகளில் படிக்க முடியும். அந்த துறைகளில் முன்னேற முடியும். நீங்கள் அரசியலுக்கும் வரவேண்டும்.

உலகத்திலேயே சாதி, மத பேதமின்றி உள்ள ஒரே சமூகம் அரவாணிகள் சமூகம் தான். இந்த எண்ணத்தில் உறுதியுடன், நம்பிக்கையுடன் வாழ்க்கையில் உயர வேண்டும். உங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசும் தயாராக உள்ளது கனிமொழி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்