புஷ் கூறிய கருத்தை வாபஸ் பெறவேண்டும்: எம்.கிருஷ்ணசாமி!

திங்கள், 5 மே 2008 (09:58 IST)
இந்தியரின் சத்துணவு குறித்து அதிபர் புஷ் கூறிய கருத்தை வாபஸ் பெற்றால்தான் அவரது அரசியல் அந்தஸ்துக்கும், அமெரிக்காவின் மனிதப் பண்பாட்டிற்கும் உகந்ததாகும் என்று த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் எம்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியர்கள் அதிகளவு சத்துணவு சாப்பிடுவதுதான் உலகம் முழுவதும் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று அமெரிக்க அதிபர் புஷ் நேற்று ஒரு பொருளாதார மாநாட்டில் கருத்து தெரிவித்திருக்கிறார். இதற்கு நாடு முழுவதும் மிகப்பெரும் கண்டனம் எழுந்துள்ளது.

நியாயம், உலகின் மிகப்பெரிய பதவி என்று கூறப்படுகிற உயர்ந்த இடத்தில் அமர்ந்துள்ள அவர் இந்த தாழ்ந்த கருத்தை சொல்லியிருப்பது மிகுந்த ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இந்திய நாட்டை பொறுத்தவரை, விடுதலைக்குப்பின் நேரு தலைமையின்கீழ் உலகின் கவனத்தையே கவரும் வகையில் 5 ஆண்டு திட்டம் தொடங்கி, இந்திராகாந்தி வெற்றிகரமாக செயல்படுத்திய பசுமைப்புரட்சி மற்றும் ராஜீவ்காந்தியின், ''உலகின் விஞ்ஞான யுகத்திற்கு 21-ம் நூற்றாண்டு இந்தியாவை இட்டுச் செல்வேன்'' என்ற பிரகடனம் உள்பட பல்வேறு சாதனைகளால் இன்றைக்கு இந்தியா உலகின் வளரும் நாடுகள் வரிசையில் முன்னேறி வருவதை அதிபர் புஷ் நன்றாக அறிவார்.

உலகில் சிறந்த உழைப்பாளர்கள் இந்தியர்கள் என்று அவரே, பலமுறை பாராட்டியிருக்கிறார். எனவே, அதிக சத்துணவை இந்தியர் உண்கிறார்கள் என்பதை வாதத்திற்கு ஏற்றால் கூட, அதற்காக யாரிடமும், எந்த நாட்டிடமும் மடியேந்தவில்லை. மாறாக ஏழ்மையான நாடுகளுக்கு உணவு பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். இந்த நிலையில் அதிபர் புஷ் கூறிய கருத்தை அவர் வாபஸ் பெற்றால்தான் அவரது அரசியல் அந்தஸ்துக்கும், அமெரிக்காவின் மனிதப் பண்பாட்டிற்கும் உகந்ததாகும் எ‌ன்று ‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்