இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மகத்தான மக்கள் சேவை புரியும் திறமையான மருத்துவர்களுக்குப் போது மான ஊதிய விகிதம், பதவி உயர்வு வழங்கப்படாத நிலை தமிழ்நாட்டில் தற்போது நிலவுகிறது. மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் இதே நிலைமை தான் இருந்து வருகிறது.
ஆந்திரா, கர்நாடகா அரசு மருத்துவத்துறை, பொது சுகாதாரத் துறைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் அதிக ஊதியம் மற்றும் பதவி உயர்வுகளைப் பெற்று வருகிறார்கள். புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் மற்றும் இதரபடிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் பணியாற்றும் அரசு மருத்துவர்களின் நிலை மட்டும் மிகவும் பரிதாபகரமானதாக உள்ளது.
விலைவாசி உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, பால் விலை உயர்வு, மின்சாரக் கட்டணம் உயர்வு என அனைத்திற்கும் அண்டை மாநிலங்களைச் சுட்டிக்காட்டி புள்ளி விவரங்களை அளிக்கும் கருணாநிதி, தமிழக அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு முரண்பாடுகளை களைய அண்டை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தும் முறையைப் பின்பற்றும் வகையில், ஒரு சிறப்பு ஊதியக் குழு அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தச் சிறப்பு ஊதியக் குழுவின் பரிந்துரைகள், ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஜெயலலிதா கூறியுள்ளார்.