பத்திரிகை செய்திக்குத் தமிழக அரசு மறுப்பு!
திங்கள், 14 ஏப்ரல் 2008 (16:02 IST)
தமிழக அரசின் தலைமைச் செயலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் தொலைபேசிகள் கண்காணிக்கப்படுவதாக வெளியாகியுள்ள பத்திரிகை செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆங்கில நாளிதழ் ஒன்றில், இன்று மாநில உளவுப் பிரிவினரால் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளின் தொலைபேசிகள் கண்காணிக்கப்படுவதாகவும், அது குறித்து ஓர் உரையாடலையும் உள்நோக்கத்தோடும் அரசுக்கு களங்கம் கற்பிக்கும் எண்ணத்தோடும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஏடு தொடர்ந்து பலமுறை இப்படிப்பட்ட உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருகிறது. எனவே இந்தச் செய்தி முற்றிலும் தவறானது. உண்மைக்கு மாறானது என்று தெரிவிப்பதோடு, இந்தச் செய்திக்குக் காரணமானவர்கள் மீது அரசு சட்டப்படியான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடரும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.