ஒகேனக்கல்: முதல்வர் கருணாநிதி எடுத்த முடிவு சரியானதல்ல- ராமதாஸ்!
புதன், 9 ஏப்ரல் 2008 (20:40 IST)
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் பற்றி பேச்சு நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி எடுத்துள்ள முடிவு சரியானதல்ல என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்த பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடியாவிட்டாலும், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தையாவது கூட்டி தனது முடிவை முதல் கருணாநிதி அறிவித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை கடந்த 1997-ம் ஆண்டிலேயே நிறைவேற்ற கர்நாடக அரசுடன் உடன்பாடு செய்யப்பட்டது. அப்போது அதன் திட்ட மதிப்பீடு ரூ.576 கோடியாக இருந்தது. 1998-ம் ஆண்டில் விரிவான மதிப்பீட்டின் அடிப்படையில் ரூ.1,008 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டது.
அந்த திட்டத்தை ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போதைய வாஜ்பாய் அரசு அணுகுண்டு சோதனை நடத்தியன் மூலம் அந்த திட்டம் தடைப்பட்டது.
தமிழ்நாட்டில் கிருஷ்ணா, வீராணம், கோவை, மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய குடிநீர் திட்டங்களுக்கு தமிழக அரசுதான் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தில் மட்டும் ஜப்பான் நிதி உதவியை எதிர்பார்த்தது சரியில்லை. பெங்களூர், ஒகேனக்கல் ஆகிய 2 குடிநீர் திட்டங்களுக்கும் ஒரே நேரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கர்நாடக அரசு பெங்களூர் குடிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி விட்டது. ஆனால் தமிழக அரசு 10 ஆண்டுகளாக தூங்கி விட்டது. காவிரி பிரச்சனையிலும் இதே நிலைதான். பெரியாறு அணை பிரச்சனையிலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த அப்போதைய அ.இ.அ.தி.மு.க. அரசு உத்தரவு பிறப்பிக்க தவறியது.
தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முடியாமல் போனதற்கு தி.மு.க- அ.இ.அ.தி.மு.க. அரசுகள்தான் காரணம்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒகேனக்கல் பிரச்சனைக்காக தான் உச்சநீதிமன்றம் செல்ல போவதில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவர் முதலமைச்சராக இருந்த போது காவிரி பிரச்சினைக்காக பலமுறை உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். நீதிமன்றத்தை மதிக்காமல் செயல்பட்டவர். உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உரியவர். அவரது பேச்சை நம்ப முடியாது.