வழக்கறிஞர்கள் சங்கம் உண்ணாவிரத போராட்டம் தள்ளி வைப்பு!
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (10:18 IST)
ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றக் கோரி நாளை நடக்க இருந்த உண்ணாவிரதப் போராட்டம் தள்ளி வைக்கப்படுவதாக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பிரபாகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஒகேனக்கல் குடிநீர்த் திட்ட பிரச்சினையில் கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவும் கர்நாடகாவை கண்டிப்பதற்காகவும் 9ஆம் தேதி சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து இருந்தோம்.
ஆனால், கர்நாடகாவில் தேர்தல் நடக்கும்வரை இந்தத் திட்டத்தை தள்ளி வைப்பதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதனால் 2 மாநிலங்களிலும் அமைதி திரும்பியுள்ளது. முதலமைச்சர் கருணாநிதியின் இந்த திறமையான அணுகுமுறையை எங்கள் சங்கம் பாராட்டி வரவேற்கிறது.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நாளை நடத்த இருந்த உண்ணாவிரதத்தை மற்றொரு நாளுக்கு தள்ளி வைப்பதென்று சங்கத்தின் நிர்வாகக் குழு கூடி முடிவு செய்துள்ளது என்று பிரபாகரன் கூறியுள்ளார்.