ஒகேனக்கல் விகாரத்தை தொடர்ந்து கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்கள் ஓடும் தியேட்டர்கள் சூறையாடப் பட்டதையும், தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதையும் கண்டித்து சென்னையில் இன்று தமிழ் திரையுலகினர் உண்ணதவிரத போராட்டம் நடத்தினர்.
கவிஞர் வைரமுத்து பேசுகையில், இந்தியாவில் ஓடும் அத்தனை நதிகளும் ஒவ்வொரு இந்தியனுக்கும் சொந்தம். எந்த நதியின் நீரையும் இந்தியன் குடிக்கலாம் என்கிற நிலை உருவாக வேண்டும். அதற்கு இந்திய நதிகளை தேசிய மயமாக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
மூத்த நடிகை மனோரமா கூறுகையில், கர்நாடகாவில் இதுபோல தொடர்ந்து நடக்கிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
நடிகர் விஜயகுமார் பேசுகையில், ரஜினி கர்நாடகாவில் பிறந்தாலும் கடந்த 35 ஆண்டுகளாக தமிழகத்தில்தான் வசித்து வருகிறார். அவரை கன்னடர் என்று சொல்லக்கூடாது. அவர் விரைவில் அரசியலுக்கு வருவார். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்றார்.
நடிகர் எஸ்.வி.சேகர் கூறுகையில், கர்நாடகத்தில் யார் வீட்டில் சண்டை நடந்தாலும் தமிழனை அடிக்கிறார்கள். கர்நாடகாவில் மட்டும் தான் இந்த மோசமான சூழ்நிலை உள்ளது. கன்னடர்களை நாம் இங்கு வாழ வைக்கிறோம். அங்கு நம்மை விரட்டுகிறார்கள். நாம் வன்முறையை கையில் எடுப்பது இல்லை. இது தான் நம் தவறு என்று தெரிவித்தார்.
நடிகர் தனுஷ் பேசுகையில், வந்தாரை வாழ வைப்பது தமிழர்களின் சிறப்பு. ஆனால் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான சில்லரை தனங்கள் நடக்கின்றன. நிறைய பேச ஆசை இருக்கு. சில காரணங்களால் பொறுமையாக இருக்கிறோம் என்றார்.
நடிகர் சூர்யா கூறுகையில், பெங்களூரில் நிறைய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. அதில் 1 லட்சம் தமிழர்கள் பணி புரிகிறார்கள். அவர்கள் வாரிசுகள் ஐ.டி.பணியை தொடர்கிறார்கள். இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீசை ஆரம்பித்தவர் தமிழர். ஓட்டுப் பதிவு எந்திரம் கண்டு பிடித்தவர் சுஜாதா, கன்னம் பாடி அணை கட்டியவர்கள் தமிழர்கள் விதானசவுதா கட்டிடம் தமிழர்களின் வியர்வை, பெங்களூர் நீதிமன் றம், மியூசியம், கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட உழைத்தவர் தமிழர்கள் என்றார்.
நடிகர் அர்ஜுன் பேசுகையில், 25 வருடமா தமிழகத்தில்தான் இருக்கிறேன். இங்கு தான் என் வீடு, சோறு. வன்முறை யார் செய்தாலும் தப்பு. அப்பாவி மக்களை தாக்குவது கண்டிக்கத்தக்கது. அங்கு பஸ் உடைத்தால் இங்கும் உடைப்பார்கள். வன்முறை தீர்வாகாது என்றார்.
மன்சூர் அலிகான் பேசுகையில், தமிழர்களை, கன்னடர்கள் இளிச்சவாயர்களாக நினைத்து அடிக்கின்றனர். கர்நாடகாவை வளர்ப்பவர் தமிழர் தான். ரஜினி, பிரகாஷ்ராஜ், அர்ஜுன், முரளி, போன்றோர் இங்குள்ளனர் பிறந்த வீடா? புகுந்த வீடா? என்றால் புகுந்த வீடு தான். அங்கு இருக்கும் உங்கள் சொத்துக்கள் அழிந்தாலும் கவலைப்படக் கூடாது. உண்ணாவிரதத்தை சிறப்பாக நடத்துவதால் நடிகர் சங்கத்துக்கு எதிராக போட்ட வழக்குகளை வாபஸ் பெறுவேன் என்றார்
இயக்குனர் வாசு பேசுகையில், சினிமா பொதுவான மொழி. எல்லாரும் ரசிக்கும் விஷயம். இதற்கு எதிராக கன்னடர்கள் செயல் படுகிறார்கள். தமிழ் தியேட்டர்களை உடைப்பது தவறான போக்கு. இது நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
நடிகர் டி.ராஜேந்தர் கூறுகையில், தமிழன் இனி குட்ட குட்ட குனிய மாட்டான் என்று ஆவேசத்துடன் கூறினார்.
நடிகர் ரமேஷ் கண்ணா கூறுகையில், இந்த போராட்டம் கன்னட மக்களுக்கு எதிரான போராட்டம் இல்லை. தமிழர்களை தாக்கும் அமைப்புக்கு எதிரான போராட்டம் என்றார்.
நடிகை குஷ்பு பேசுகையில், கர்நாடகத்தில் என்ன பிரச்சினை ஏற்பாட்டாலும் தமிழர்களையும், தியேட்டர்களையும் தான் தாக்குகிறார்கள். எல்லோரும் இந்தியர்கள். அமைதியாக வாழ வேண்டும். சினிமாகாரர்கள் ஒரே குடும்பமாக இருக்கிறோம். கன்னடர்கள் இதை உணர வேண்டும் என்றார்.