மழை சேத நிவாரணத்துக்கு ரூ.175 கோடி ஒதுக்கீடு: கருணாநிதி!

வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (17:02 IST)
மழை சேத நிவாரணத்துக்கு 175 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது கு‌றி‌த்து தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் பெய்த எதிர்பாராத பெரு மழை காரணமாக விவசாயப் பயிர்கள் சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளன. இம் மழையினால் ஏறக்குறைய 47 ஆயிரம் ெக்டேர் நெற்பயிர் மற்றும் இதர பயிர்களும் சேதமடைந்ததுடன், 24 பேர் உயிரிழந்தனர்.

800-க்கும் மேற்பட்ட கால் நடைகளின் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இப்பெருமழையினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த மதிப்பீடுகள் அடங்கிய அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பேரிடர் நிவாரண நிதி யிலிருந்து 100 கோடி ரூபாய் வழங்கி அரசு 25.3.2008 அன்று ஆணையிட்டுள்ளது.

மேலும் இப்பெருமழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிடும் பொருட்டு சேதமடைந்த நெற்பயிருக்கு ஒரு ெக்டேருக்கு ரூ.4,000 என்று தற்பொழுது வழங்கப்படும் நிவாரண தொகையினை ரூ.7,500 என உயர்த்தி வழங்கவும், 2 ெக்டேர் அளவிற்கு தான் வழங்க வேண்டும் என தற்பொழுதுள்ள வரம்பினை தளர்த்தி பாதிக்கப்பட்ட நிலம் எத்தனை ெக்டேராக இருந்தாலும் அனைத்து நிலத்திற்கும், அனைத்து பயிர்களுக்கும் நிவாரண உதவி அளித்திடவும் அரசு ஆணையிட்டுள்ளது.

மேலும் கால்நடைகள் இழப்பிற்கு நிவாரணம் வழங்க தற்பொழுது நடைமுறையில் உள்ள எண்ணிக்கை குறித்த உச்சவரம்பினை தளர்த்தி இறந்து போன அனைத்து கால்நடைகளுக்கும் நிவாரணம் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

ம‌த்‌திய குழு 6ஆ‌ம் தே‌தி ஆ‌ய்வு!

தமிழக அரசின் கோரிக்கை அடிப்படையில், பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட்டு, உரிய உதவி வழங்குவதற்குப் பரிந்துரை செய்வதற்காக நான்கு உறுப்பினர்கள் கொண்ட குழுவினை மத்திய அரசு அனுப்பிட உள்ளது. இக்குழு 6.4.2008 முதல் 9.4.2008 வரை பாதிப்படைந்த பகுதிகளை ஆய்வு செய்யும்.

பாதிப்படைந்த விவசாயிகள், கால்நடைகளை இழந்து தவித்திடும் குடும்பங்கள் மற்றும் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 100 கோடி ரூபாயுடன், கூடுதலாக 75 கோடி ரூபாய் ஆக மொத்தம் 175 கோடி ரூபாய் நிவாரண உதவியாக வழங்கிட முடிவு செய்து முதலமைச்சர் கருணாநிதியை இன்று ஆணையிட்டுள்ளார் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்