காவிரி, முல்லைப் பெரியாறு, தமிழீழம் என எல்லா விடயங்களிலும் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன; தமிழர்கள் இதற்கு இடம் கொடுக்காமல் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் கூறினார்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகள் தாக்கப்பட்டதை எதிர்த்தும் தமிழ்த் திரையுலகினர் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில் நடிகர் சத்யராஜ் ஆவேசத்துடன் பேசிய விவரம் வருமாறு:
நடிகர்கள் தங்களின் தனிப்பட்ட பெருமையைப் பேசி கைதட்டல் வாங்குவதற்கான இடமல்ல இது. ஒட்டுமொத்தத் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவே நாம் கூடியுள்ளோம். நான் தமிழர்கள் நசுக்கப்படுவதைப் பற்றி மட்டுமே பேசவுள்ளேன்.
தமிழர்கள் மரம்போல உள்ளோம். மரம் என்றால் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள். இதனால் நாம் உணர்ச்சியற்று இருக்கக் கூடாது. நாம் தாக்கப்பட்டால் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
ஒகேனக்கல் தமிழக எல்லைக்குள் உள்ளது. நமது எல்லைக்குள் நமக்கு வழங்கப்பட்ட நீரை நமது குடிநீருக்காகப் பயன்படுத்துவதை யார் தடுப்பது? இதைத் தடுப்பதற்குக் கன்னடர்கள் யார்?
கண்ணிற்குக் கண் என்று போனால் உலகில் வாழும் 600 கோடி பேரும் கண்ணை இழந்து குருடராகத்தான் வாழ்வார்கள் என்று காந்தி சொன்னார். பழிக்குபழி வாங்குவதை தடுக்கும் அந்த வாக்கு கதைக்கு உதவாது. தற்போது அதைப் பின்பற்றினால் தமிழர்கள் 10 கோடி பேரைத் தவிர மீதமுள்ள 590 கோடி பேரும் பார்வையுடன் இருப்பார்கள்.
தமிழர்கள் இப்படியே இருந்தால் நமது முதுகின் மீது யார் வேண்டுமானாலும் ஏறிக் கொள்வார்கள். அதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.
ஒகேனக்கல், முல்லைப் பெரியாறு, தமிழீழம் என எல்லா விடயங்களிலும் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றது. ஈழத்தில் வசிப்பவர்கள் நமது சகோதரர்கள் இல்லையா? அவர்கள் நசுக்கப்படும் நிலையில் இலங்கைக்கு ஆயுத உதவி செய்யலாமா? கூடாது. கூடவே கூடாது!
நாங்கள் ஆயுதம் எடுக்க விரும்பவில்லை. சில கன்னட வெறியர்கள் எங்களை அதற்குத் தூண்டுகிறார்கள். நம்மைச் சீண்டினால் நாம் பொறுமையுடன் இருக்கக் கூடாது. தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.