கர்நாடகத்தை கண்டித்து 8ஆம் தேதி முழு கடை அடைப்பு: த.வெள்ளையன்!
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (09:34 IST)
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தடுக்கும் கர்நாடகத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் 8ஆம் தேதி முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறினார்.
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் கர்நாடகம் பிரச்சினை செய்வது நியாயம் அல்ல. இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம்.
தமிழ் மக்களின் உணர்வை வெளிப்படுத்தவும், கர்நாடகத்தின் அராஜகத்தை கண்டித்தும் ஏப்ரல் 8ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் முழு கடைஅடைப்பு செய்கிறார்கள். ஓட்டல், டீக்கடை உள்பட அனைத்தும் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டு இருக்கும்.
அன்றை தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வணிகர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபடுவார்கள். தமிழகத்தில் உள்ள கன்னடர்களின் கடைகள் தாக்கப்படுவது விரும்ப தகாத செயல். தமிழக அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை பாதுகாக்கப்படவேண்டும். 8ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்தில் 25 லட்சம் வணிகர்கள் பங்குபெறுவார்கள். தேசிய நலனை கருதி ஒருநாள் இழப்பை நாங்கள் சந்திக்கின்றோம். ஒரு நாள் கடையடைப்பால் சுமார் ரூ.150 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று த.வெள்ளையன் கூறினார்.