சட்டப் பேரவையில் இன்று எரிசக்தி துறை, பணியாளர் நிர்வாக சீர்த்திருத்த துறை மானிய கோரிக்கைகளை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்கள் அமைக்க ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தை செங்கல்பட்டில் அமைக்க எரிசக்தி மேம்பாட்டு முதன்மை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அரசுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது. இதில் இடம் பெறும் நிறுவன உரிமையாளர்கள் ரூ.2,300 கோடிக்கு மேலாக முதலீடு செய்வார்கள்.
தாவர சக்தி கொதிகலன் வடிகால், சிறப்பு வாயு என்ஜின்கள், சூரிய ஒளி சாதனங்கள் காற்றாலைகள் புனல் எந்திரங்கள், கார்பன் எரி மின்கலன் ஆகியவற்றை தயாரிக்கும் 60 உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்கும். இதன் மூலம் 5,000 பேருக்கு நேரடியாகவும், 10,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும்.
வட சென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் திட்டத்தை நிகழ்வதற்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே இடத்தில் மேலும் ஒரு 600 மெகாவாட் மின் திட்டம் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற்று வருகிறது. இது ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் திருப்பி கொடுக்கப்படும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.