இரும்பு, சிமெண்‌ட் விலை உயர்வுக்கு ஏற்ப நிவாரணம்: அகில இந்திய கட்டுனர் வல்லுனர்கள் சங்கம்!

வியாழன், 3 ஏப்ரல் 2008 (13:51 IST)
''இரும்பு க‌ம்ப‌ி, சிமெண்‌ட் போன்ற கட்டுமான பொருட்கள் விலை உயர்வுக்கு ஏற்ப தமிழக அரசு நிவாரண உதவி வழங்காவிட்டால் ஏ‌ப்ர‌‌ல் 20ஆ‌ம் தேதி முதல் அரசு கட்டிட பணிகளில் ஈடுபடமாட்டோம்'' என்று அகில இந்திய கட்டுனர் வல்லுனர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது கு‌றி‌த்து அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க முன்னாள் தலைவர் ஆர்.பத்மநாபன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில கட்டுனர் வல்லுனர் சங்க தலைவர் வி.என்.வரதராஜன் ஆகியோர் கூறுகை‌யி‌ல், இரும்பு கம்பி கடந்த ஜனவரி‌யி‌ல் ஒரு டன் ரூ.33 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. தற்போது ரூ.52 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரோடு போடுவதற்கு பயன்படும் தார் ஒரு டன் ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனைஆனது ரூ.29 ஆயிரமாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மூட்டை சிமெண்டு ரூ.160-க்கு விற்பனை ஆனது தற்போது ரூ.240 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வால் இதற்கு முன்பு அரசு கொடுத்த ஒப்பந்த புள்ளிகள் அடிப்படையில் கட்டிடங்களை கட்ட முடியாமல் மிகப்பெரிய நஷ்டத்தில் இருக்கிறோம். இந்த நிலையால் அரசு பணிகள் மட்டும் அல்லாமல் தனி நபர் வீடு கட்டும் பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. லட்சக் கணக்கான கட்டிட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

தமிழக அரசு இரும்பு மற்றும் இரும்பு சார்ந்த பொருட்களின் விலை உயர்வை ஈடுசெய்தால் மட்டுமே ஒப்பந்ததாரர்களால் எடுத்த பணிகளை நிறைவேற்ற முடியும். அல்லது முன்பு போல் தமிழக அரசே இரும்பு கம்பி, சிமெண்டு, தார் போன்ற பொருட்களை குறித்து விலையில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கவேண்டும்.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஒப்பந்ததாரர்களுக்கு நிவாரணம் வழங்குவதை போ‌ல் தமிழக அரசும் ஒப்பந்ததாரர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். இ‌ல்லையெ‌ன்றா‌ல் ஏ‌ப்ர‌ல் 20ஆ‌ம் தேதி முதல் கட்டுனர் வல்லுனர்கள் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபடுவார்கள். இந்த போராட்டத்தால் தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான அரசு பணிகள் பாதிக்கப்படும் எ‌ன்று அவ‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்