கன்னட அமைப்பைக் கண்டித்து தமிழ் திரையுலகத்தினர் வெள்ளிக் கிழமை உண்ணாவிரதம்!
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (20:45 IST)
ஒகேனக்கல் பிரச்சனையை எழுப்பி கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகளை கன்னட அமைப்பினர் தாக்கியதைக் கண்டித்து சென்னையில் தமிழ் திரையுலகத்தினர் வரும் வெள்ளிக் கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.
சென்னையிலுள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இன்று நடந்த கூட்டத்தில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்களை திரையிடுவதற்கு கர்நாடக ரக்ஷனா வேதிகா அமைப்பினர் தடுத்து வருவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கன்னட அமைப்பின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வெள்ளிக் கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கர்நாடகவைச் சேர்ந்த நடிகர் நடிகைகளும் பங்கேற்க வேண்டும் என்றும், அப்படிப் பங்கேற்காவிடில் அவர்கள் தொடர்புடைய படங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக ஒகேனக்கல் சென்று போராடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.