ஆன்லைன் வர்த்தகத்து‌க்கு தடை: ராமதாஸ் வ‌லியுறு‌த்த‌ல்!

புதன், 26 மார்ச் 2008 (11:32 IST)
அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு காரணமான `ஆன்லைன்' வர்த்தகத்தை தடை செய்யாவிட்டால் போராட்டம் நடத்த போவதாக பா.ம.க ‌நிறுவன‌ர் ராமதாஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருட்களின் உற்பத்தி குறைந்து, தட்டுப்பாடு ஏற்படும்போது விலை உயரும் என்பது நியதி. ஆனால், அன்றாடத் தேவைப் பொருட்கள் எதற்கும் இப்போது உற்பத்தியில் தட்டுப்பாடு என்பது இல்லை. ஆனாலும் விலை உயர்ந்து கொண்டே போகிறது.

ஆன்லைன் வர்த்தகத்தில் மிகவும் விரிவான முறையில் ஏற்படும் ஊகம் தான் அன்றாடத் தேவை பொருட்களின் விலை உயர்வுக்கு அடிப்படையான காரணம். ஆன்லைன் வர்த்தகத்தினால் தான் உணவு தானியங்கள் மற்றும் பிற அன்றாடத் தேவைப் பொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இதற்கு ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து அன்றாட தேவைப் பொருட்கள் அனைத்தையும் தடைசெய்ய வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்துடைய மாநில முதலமைச்சர்களின் ஆதரவைத் திரட்டி மத்திய அரசிடம் வலியுறுத்தவேண்டும். மத்திய அரசிடம் நீங்களே வலியுறுத்தலாமே என்று சுட்டிக்காட்டாமல், தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் இதில் முன் முயற்சி எடுக்கவேண்டும்.

மாநில அரசு இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு உணவுப் பாதுகாப்பினை வழங்குவதற்கான பயனுடைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திப் பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்த எண்ணியுள்ளது.

மக்களின் சார்பாளர்களான சட்டப்பேரவை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த போராட்டத்திற்கு தலைமை ஏற்பார்கள். அது எத்தகைய போராட்டம் என்பதை கட்சியின் நிர்வாகக் குழு இன்னும் ஓரிரு நாளில் கூடி முடிவெடுத்து அறிவிக்கும் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்