தமிழகம் முழுவதும் மழையால் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
webdunia photo
WD
கன்னியாகுமரி, மாலத்தீவு கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருவாரூர், தஞ்சை, நாகபட்டினம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
webdunia photo
FILE
குறிப்பாக, தென் தமிழகத்தில் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. உபரி நீர் ஆறுகளில் திறந்து விடப்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளன. பயிர்கள் சேதமடைந்துள்ளன.
மழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், ஆற்றையொட்டி வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு கடந்த இரு நாட்களாக பல மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்ததால் உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்களில் நீர் தேங்கி உள்ளது. இதனால் உப்பு உற்பத்திபெருமளவில் பாதிப்படைந்துள்ளது.
பலத்த காற்று காரணமாக கடல் கொந்தளிப்புடன் இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தமிழகத்தில் கன மழையினால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய முதல் கட்டமாக ரூ.100 கோடி நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1லட்சம் வழங்கப்படும் என்றும், பயிர்ப் பாதிப்புக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.4,000 வீதம் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.