வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு: கருணாநிதி!
சனி, 22 மார்ச் 2008 (15:27 IST)
தமிழக முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய முதல் கட்டமாக ரூ.100 கோடி நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1லட்சம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருவாரூர், தஞ்சை, நாகபட்டினம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ள நிவாரணப் பணி தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, தற்போது பெய்து வரும் கனத்த மழை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி மழைக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவில் பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது உடனடி நிவாரணப் பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும். பயிர்ப் பாதிப்புக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.4,000 வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.