''ஆற்று மணல் எடுப்பதற்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவை உடனடியாக கைவிடக் கோரி அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இது குறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கடமலை, மயிலை ஒன்றியத்தில் உள்ள தர்மராஜபுரம் கிராமத்தில் வைகை ஆற்றில் மணல் அள்ளுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டு 3.3.2008 முதல் மணல் அள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. இத்தகைய மக்கள் விரோதச் செயலால் ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆண்டிப்பட்டி தொகுதி மக்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் உபயோகம் உள்ளதாக இருக்கின்ற வைகை ஆற்றில் உள்ள மணலை எடுப்பதற்கு வழங்கப்பட்டு இருக்கும் உத்தரவை உடனடியாக கைவிட வலியுறுத்தி, தேனி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை (14ஆம் தேதி) காலை 10 மணி அளவில், கடமலை, மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட தர்மராஜபுரம் கிராமத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.