தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக் காலம் வருகிற ஏப்ரல் மாதம் முடிவடைவதை முன்னிட்டு, அந்த இடங்களுக்கு புதிதாக 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 26 ஆம் தேதி நடக்கிறது. தமிழக சட்டப் பேரவை உறுப்பினர்கள் வாக்களித்துப் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (சனிக்கிழமை) துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 15 ஆம் தேதியாகும். 17 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடக்கும். வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு வருகிற 19 ஆம் தேதி கடைசி நாளாகும். 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 29 ஆம் தேதி தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும்.
தேர்தல் அதிகாரியாக தமிழக சட்டப் பேரவைச் செயலர் எம்.செல்வராஜை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. சட்டப் பேரவைத் துணை செயலர் உதவி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இன்று முதல் 15 ஆம் தேதி வரை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரி அல்லது உதவி தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.