அரசை எதிர்த்துப் போராட்டம்: ராமதாஸ் எச்சரிக்கை!
சனி, 1 மார்ச் 2008 (13:02 IST)
சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது தொடர்பாக, தமிழக அரசு தனது கொள்கை முடிவை நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்காவிட்டால் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரித்தார்.
இது குறித்து சேலத்தில் அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் விதத்தில், இதில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கலாம் என மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது" என்றார்.
"நமது மக்களின் வாழ்க்கையில் விவசாயத்துக்கு அடுத்தது சில்லறை வணிகம்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இதன்மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றன. சில்லரை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் புகுந்தால், இவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்" என்றும் அவர் கவலை தெரிவித்தார்.