விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும்: திருமாவளவன்!
ஞாயிறு, 27 ஜனவரி 2008 (12:50 IST)
''இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும்'' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த கருத்துரிமை மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அக் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், விடுதலைப்புலிகளின் தூதுவராக இருந்த பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனை இலங்கை ராணுவம் படுகொலை செய்தது. அவருக்கும், அவருடன் வீரமரணம் அடைந்த அனைவருக்கும் இந்த மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது. தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்கும், அருந்ததியர் சமூகத்திற்கு உள்ஒதுக்கீடு வழங்கியதற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
செம்மொழியான தமிழ் மொழியை இந்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக நடைமுறைப்படுத்த விரைவில் அறிவிக்கவேண்டும் என்று இந்திய அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது. தமிழை நீதிமன்ற வழக்கு மொழியாக நடைமுறைப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தி கொன்று வருகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து சவால்விட்டு வரும் இலங்கை அரசின் போக்கை வேடிக்கை பார்ப்பது இந்திய அரசின் ஆளுமையை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. தமிழக மீனவர்களை பாதுகாக்க இந்திய அரசு முன்வரவேண்டும்.
இலங்கை தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மக்கள் இயக்கமாக அங்கீகரிக்கவேண்டும் எனவும், விடுதலைப்புலிகள் மீது பொருளாதார தடை விதித்துள்ள நாடுகள் அதை முற்றிலுமாக கைவிடவேண்டும் எனவும், இந்திய அரசு விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனே நீக்கவேண்டும் எனவும் இந்த மாநாடு வலியுறுத்துகிறது என்று திருமாவளவன் கூறினார்.