தொழிற்சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமையை மறுத்து வரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலை நிர்வாகம் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலை நிர்வாகம், தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான சங்கம் அமைக்கும் உரிமையைக் கூட மறுத்து வருவது கண்டனத்திற்கு உரியதாகும்.
தொழிற்சங்கம் அமைக்கப்பட்டவுடன் அதன் பிரதான நிர்வாகிகள் இடமாற்றம் செய்யப்பட்டதுடன், தற்போது சங்கத் தலைவர், பொதுச் செயலர் உட்பட எட்டு பேர் பழிவாங்கும் முறையில் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தொழிற்சாலை வாயிலில் ஏற்றப்பட்ட கொடி, சங்கப் பெயர் பலகைகளை நிர்வாகத்தினர் அகற்றியுள்ளனர்.
நேற்று காலையில் ஆலை வாயிலில் கொடியேற்றச் சென்ற சி.ஐ.டி.யு. மாநிலப் பொதுச்செயலரும், ஹூண்டாய் தொழிலாளர் சங்கத்தின் கவுரவத் தலைவருமான அ.சவுந்தரராசன், சி.ஐ.டி.யு.வின் மாநில, மாவட்டத் தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிற்சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமையை மறுத்து வரும் பன்னாட்டு நிறுவனத்தின் செயல்களை தடுக்க மாநில அரசு மேலும் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகத்தின் அராஜக நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொழிலாளர் துறை அவசர உணர்வோடு செயல்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.