அ.இ.அ.தி.மு.க. தான் எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசு. உலகத்தில் உள்ள வேறுயாரும் இதற்கு உரிமை கொண்டாட முடியாது என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 91வது பிறந்தநாளையொட்டி அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்திற்கு இன்று சென்ற அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அங்கு தொண்டர்களிடையே பேசுகையில், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்திற்கு இன்று தான் நான் வருவதாக பத்திரிகைகளில் பலவாறாக செய்திகள் வருகின்றன. அது தவறாகும். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு 1995ல் நான் முதலமைச்சராக இருந்தபோது, உடல்நலம் குன்றி இருந்த ஜானகி அம்மையாரை சந்திக்க நான் வந்திருந்தேன். 96ல் அவர் மறைவுற்ற சமயத்தில் நான் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினேன்.
இது எங்களின் இல்லம். எங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் நாங்கள் வருவோம். இது பற்றி யாரும் கருத்து கூறவேண்டிய அவசியம் இல்லை. எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி சிலர் திடீர் திடீர் என கட்சிகளை தொடங்குகிறார்கள். எம்.ஜி.ஆரைப் பார்த்து அவரைப் போல பெரிய ஆளாக வேண்டும் என்று நினைத்து கட்சி தொடங்குபவர்களை கண்டால் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை தான் நினைவுக்கு வருகிறது.
தங்களைப்பற்றி சிலர் என்னவெல்லாமோ நினைத்துக் கொண்டு பேசித் திரிகிறார்கள். எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு நாம் தான். உலகில் உள்ள யாரும் அதற்கு உரிமை கொண்டாட முடியாது. எம்.ஜி.ஆர் கண்ட அ.இ.அ.தி.மு.க.வை நாம் தான் நடத்தி வருகிறோம். நாங்கள் தான் உண்மையான வாரிசு என்று சிலர் சொன்னால் அவர்களை பார்த்து மக்கள் எள்ளி நகையாடுவார்கள். தேர்தல் வரும்போது இதனை மக்கள் நிரூபிப்பார்கள் என்று ஜெயலலிதா கூறினார்.