காணும் பொங்கலையொட்டி சென்னை, புறநகர் பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான இன்று காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. பொது மக்கள் தங்கள் குடும்பத்தினருடனும், உற்றார், உறவினருடனும் வெளியில் சென்று உல்லாசமாகவும், மகிழ்ச்சியாகவும் பொழுது போக்கும் வகையில், பல்வேறு பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்றனர்.
சென்னை மெரீனா கடற்கரையில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம், கூட்டமாக குவிந்தனர். மாட்டு வண்டிகளிலும், பிற வாகனங்களிலும் வந்த மக்கள் மதிய சாப்பாடு, பலகாரங்கள் போன்ற உணவு வகையுடன் குழந்தை, குட்டிகளுடன் மெரீனாக்கு வந்து சேர்ந்தனர்.
உழைப்பாளர் சிலை அருகே 5 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கூட்டத்தினர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தீவுத்திடலில் நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சி காலை 9 மணி முதல் திறக்கப்பட்டது. அங்கும் கூட்டம் அலைமோதியது. கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் மக்கள் கூட்டம் இன்று அங்கும் அதிகமாக காணப்பட்டது. அத்துடன் அருகில் உள்ள காந்தி மண்டபம், தியாகிகள் நினைவிடம், காமராஜர் நினைவிடம் ஆகியவற்றிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமான மக்கள் இன்று காலை முதல் திரண்டனர். இவை தவிர வி.ஜி.பி., கிஷ்கிந்தா, எம்.ஜி.எம்., குவின்ஸ் லேண்ட் போன்ற கேளிக்கை பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. புத்தகக் கண்காட்சி இன்று காலை முதல் திறக்கப்பட்டது. மக்கள் கூட்டம் சாரை சாரையாக புத்தகக் கண்காட்சிக்கு சென்று பார்வையிட்டனர். தியேட்டர்கள், கோயில்கள், முட்டுக்காடு படகுத் துறை, கோவளம், மகாபலிபுரம் ஆகிய இடங்களிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
காணும் பொங்கலையொட்டி மாநகர போக்குவரத்துக் கழகம் ஏராளமான சிறப்பு பேருந்துகளை இயக்கியுள்ளது. பாதுகாப்பு கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் மக்கள் சிறப்பாக கொண்டாடினர்.