''சிறிலங்கா இன பிரச்சனைக்கு இந்தியாவால் மட்டுமே தீர்வுகாண முடியும் என்பதால் இப்பிரச்சனையில் இந்தியா தலையிட வேண்டும்'' என்று சிறிலங்கா அமைச்சர் சந்திரசேகரன் கேட்டு கொண்டுள்ளார்.
சென்னை வந்துள்ள சிறிலங்கா சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சந்திரசேகரன், பா.ம.க. நிறுவனர் ராமதாசை இன்று சந்தித்து பேசினர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறிலங்கா பிரச்சனையில் இந்திய அரசு கருத்து தெரிவித்தால் மட்டும் போதாது, அதற்குரிய அழுத்தத்தை தர வேண்டும். இந்தியாவால் மட்டுமே ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். அதற்கான வழிகள், வல்லமை, வாய்ப்பு ஆகியவை இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது. இதனை பயன்படுத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முன்வர வேண்டும். அனைத்து தலைவர்களும் இதற்கு ஆதரவு தர வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை நேற்று சந்தித்து பேசிய நான், இன்று பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசினேன். தி.க. தலைவர் வீரமணியை சந்திக்க உள்ளேன். முதல்வரை சந்திக்கவும் அனுமதி கேட்டிருக்கிறேன். அனுமதி கிடைத்தவுடன் அவரையும் சந்திப்பேன்.
சிறிலங்கா அரசு போர் நிறுத்தத்தை ரத்து செய்துள்ளது, தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது மனித உரிமையை மீறிய செயலாகும். உலக நாடுகள் அனைத்தும் சமாதானத்தைத்தான் விரும்புகின்றன என்று சிறிலங்கா அமைச்சர் கூறினார்.
பின்னர் ராமதாஸ் கூறுகையில், ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அனைத்து தலைவர்களும் ஒருமித்த குரலில் ஆதரவு அளிக்க வேண்டும். இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு ஒரு தீர்வை காண வேண்டும். முதலமைச்சர் கருணாநிதி தலையிட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இதன் மூலம் அவரது ஆட்சி காலத்தில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு முடிவு காணப்பட்ட பெருமை அவருக்கு கிடைக்கும். மேலும் அவர் மத்திய அரசிடம் இது குறித்து வலியுறுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.