தமிழ்நாட்டில் நடுத்தர மக்கள் குறைந்த விலையில் சிமெண்ட் பெறுவதற்கு வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து கடிதம் பெற வேண்டும் என்றும், அந்த கடிதத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வட்டக்கிடங்குகளில் காட்டி தேவைப்படும் சிமெண்ட்டை ரூ.200 விலையில் பெற்று கொள்ளலாம் என்றும் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு சாதாரண சாமான்ய, நடுத்தர மக்களுக்கும் தேவைப்படும் சிமெண்ட் விலை உயர்ந்து கொண்டே போவதை தடுத்து நிறுத்திட அண்மையில் எடுத்த முயற்சி மற்றும் நடவடிக்கை காரணமாக சிமெண்ட் அதிபர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் எடுத்தறிவித்த முடிவுகளைப் பரவலாகப் பலரும் வரவேற்றிருந்தனர்.
இதிலும் அரசியலைப் புகுத்தி ஆதாயம் தேடுவோர் சிலர், தேவையற்ற அய்யப்பாடுகளை எழுப்பி, அறிக்கைகள் விடுத்து மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திட முனைவது குறித்து அரசு, சிமெண்ட் வினியோகம் குறித்து எடுத்துள்ள முடிவு எப்படி நிறைவேற்றப்படவிருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்திட விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் சிமெண்ட் நிறுவனங்கள் மாதம் ஒன்றுக்கு இருபது லட்சம் மூட்டைகள் சிமெண்டை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் மூட்டை ஒன்று ரூ. 200 விலையில் விற்பனை செய்யும்.
ஆயிரம் சதுர அடி வரை வீடு கட்டும் உண்மையான பயனாளிகளான ஏழை மற்றும் நடுத்தரப் பிரிவு குடும்பங்கள்; வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து சிமெண்ட் ஒதுக்கீட்டிற்கான ஒதுக்கீட்டு கடிதத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
வட்டாட்சியர் அளிக்கும் ஒதுக்கீட்டு கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 209 மாவட்டக் கிடங்குகளில் விற்பனை செய்யப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.