தமிழகத்தில் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.223 கோடி செலவில் ஊரகச் சாலைகள்- பாலங்கள் அமைக்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிராமச் சாலைகளைச் சீரமைத்து மக்களின் போக்குவரத்திற்கு வசதியாக மேம்படுத்துவதில் தமிழக அரசு மிகுந்த முன்னுரிமை வழங்கித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.145 கோடி மதிப்பீட்டில் 219 கிராமச் சாலைப் பணிகளும், அவற்றினிடையே உள்ள 32 பாலப் பணிகளும், ரூ.41 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கிராமப்புறங்களில் பேருந்துகள் செல்லும் 64 சாலைகளும், அவற்றில் உள்ள 11 பாலப் பணிகளும், ரூ.36 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் குடியிருப்புகளை இணைக்கும் 75 சாலைப் பணிகளும், அவற்றில் உள்ள 6 பாலப் பணிகளும்,
ஆக பல்வேறு மாவட்டங்களிலும் மொத்தம் 910 கி.மீ. நீளத்திற்கு 358 ஊராட்சி சாலைகளையும், ஊராட்சி ஒன்றியச் சாலைகளையும், 49 பாலப் பணிகளையும் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.222 கோடியே 75 லட்சம் செலவில் நிறைவேற்றிடவும், இப்பணிகளை விரைவாக நிறைவேற்றி முடித்திடவும் 4-ந் தேதி (நேற்று) அனுமதி வழங்கி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.