நலிவுற்ற 1,192 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்தி அவற்றின் சொந்த வருமானத்தை பெருக்குவதற்காக 238 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமாக இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஒவ்வொன்றுக்கும் 20 லட்சம் ரூபாய் காசுக்கடனாக வழங்கப்படும். இந்த நிதி பொது மக்களுக்கு கடனாக அளிக்கப்படும்.
நகைக் கடன் வழங்குவதால் வட்டியாக வருடத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் கிடைக்கும். ஆனால் வங்கிகளில் வட்டி வருவாயை அதிகரிக்க ஏதுவாக தொடக்க கூட்டுறவு வளர்ச்சி நிதியில் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வட்டி மானியமாக பெற வாய்ப்பு இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும்.
இவ்வாறு ஆண்டொன்றுக்கு 1.40 லட்சம் ரூபாய் வட்டி வருவாய் கிடைக்கும். இதன் மூலம் வங்கிகள் நடைமுறை செலவுகளை சரிகட்டுவதுடன் வணிகத்தையும் பெருக்கி கொள்ள முடியும். இத்திட்டத்தின் முதல் கட்டமாக 12 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு 2.40 கோடி ரூபாய் நிதியுதவியை முதல்வர் கருணாநிதி இன்று வழங்கினார்.