பிரதமரின் இலங்கைப் பயணத்தை எதிர்த்து போராட வே‌ண்டா‌ம் : வீரமணிக்கு டி.சுதர்சனம் வேண்டுகோள்!

Webdunia

திங்கள், 31 டிசம்பர் 2007 (10:19 IST)
''பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு மேற்கொள்ளும் பயணத்தை ஆட்சேபித்து திராவிடர் கழகம் நடத்த அறிவித்துள்ள போராட்டத்தை வீரமணி கைவிடவேண்டும்'' என்று தமிழ்நாடு சட்டப் பேரவைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியி‌‌ட்டு‌ள்ள அற‌ி‌க்கை‌யி‌ல், இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக 1987ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி எடுத்த தீவிர முயற்சியை அடுத்து இந்திய -இலங்கை உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி தமிழ்த்தாயகம் என்ற நீண்டநாள் கோரிக்கை ஏற்கப்பட்டு மாநில நிர்வாக அரசும் உருவானது.

இந்த உரிமைகளைப் பெற்றுத் தந்த ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொலை செய்ததால் அந்த இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் இந்தியாவுக்கு உள்ள அக்கறையை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், தமிழர் பிரச்னையைத் தீர்க்கத் தடையாக இருப்பதே அங்குள்ள பயங்கரவாதமும் வன்முறையும்தான்.

சார்க் அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளுடன் நல்லுறவு இருப்பதுதான் பயனைத் தரும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் பயங்கரவாதம் தலைதூக்கி வருவது அச்சுறுத்துகிறது. இந்நிலையில் பயங்கரவாதத்துடன் சமரசம் செய்து கொள்வதை ஏற்க முடியாது. மன்மோகன் சிங் ஆட்சி மத்தியில் அமைய வேண்டும் என்பதில் அக்கறை காட்டிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, இப் போராட்டத் திட்டத்தைக் கைவிடவேண்டும் எ‌ன்று சுத‌ர்சன‌ம் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்