மதுரை கடன் வசூல் தீர்ப்பாயமும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையமும் இணைந்து முதன் முதலாக மக்கள் நீதிமன்றத்தை மதுரையில் நடத்தின. இதனை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவருமான ஆர்.கருப்பையா துவக்கி வைத்தார்.
ரூ.15.61 கோடி மதிப்புடைய 51 வழக்குகளை பல்வேறு வங்கிகள் மக்கள் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்தன. இதில் ரூ.3.08 கோடி மதிப்பிலான 12 வழக்குகள் சமரசம் செய்யப்பட்டு, சுமுகமாகத் தீர்க்கப்பட்டன. லட்சுமி விலாஸ் வங்கி ரூ.1.75 கோடி தொகையை மக்கள் நீதிமன்றத்தின் வாயிலாக வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மக்கள் நீதிமன்றத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதி எம். கனகசபாபதி தலைவராகவும், காந்தி அருங்காட்சியகத்தின் திட்ட அலுவலர் டாக்டர் டி. ரவிச்சந்திரன், மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் சிறப்பு அரசு வழக்கறிஞர் பழ இராமசாமி ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருந்தனர்.