குஜராத் தேர்தல் முடிவு இந்திய அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று பா.ஜ.க. மாநிலதலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்றத்துக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. குஜராத்தில் தற்போது நடைபெறும் தேர்தல் இந்திய அரசியலில் திருப்புமுனையாக அமையும். அங்கு தமிழர் வாழும் பகுதியில் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் நாளை முதல் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
குஜராத்தில் நரேந்திர மோடி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மரண வியாபாரி என்று நரேந்திர மோடியை கூறியது தேர்தல் விதிமுறைகளை மீறிய பொறுப்பற்ற செயலாகும்.
தமிழ்நாட்டில் தலைதூக்கி உள்ள வன்முறையால் சட்டம்-ஒழுங்கு செயலற்று போனது உண்மை. அ.தி.மு.க.வுடன் நெருங்கி செல்வது போல தோற்றம் உருவாக காரணம் ராமர் பாலம் பிரச்சினைதான். மலேசியாவில் இந்திய வம்சாவழியினருக்கு மனித உரிமைகள் மறுக்கப்படுவது கண்டனத்துக்கு உரியது என்று இல.கணேசன் கூறினார்.