முறைப்படி கேட்டால் வங்கிகளில் கண்டிப்பாக கட‌ன் : ப.சிதம்பரம்!

Webdunia

திங்கள், 10 டிசம்பர் 2007 (09:33 IST)
வங்கிகளில் முறைப்படி கேட்டால் கண்டிப்பாக கடன் கிடைக்கும் என்று மத்திய நிதி அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம் கூறினார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் புதிய கிளையை மத்திய நிதி அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம் திறந்து வைத்து பேசுகையி‌ல், ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் இதயமே நிதித்துறைதான். அந்த இதயத்தின் துடிப்பாக இருப்பது வங்கிகள்தான். வங்கிகள் சீராக இருந்தால் நாட்டின் பொருளாதாரம் சீராக உள்ளது என்று அர்த்தம். இந்தியாவில் 70 ஆயிரம் வங்கிகள் உள்ளன. இருந்தாலும், இவை போதாது என்று பல ஆயிரக்கணக்கான வங்கிகளை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தில் எந்த தரப்பினருக்கும் கடன் மறுக்கப்படுவதில்லை. கடனை கேட்பதற்கும், வாங்குவதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும். மத்திய அரசு 2 புதிய திட்டங்களை சமீபத்தில் மக்களுக்கு அறிவித்துள்ளது. ஒன்று பயிர்க்காப்பீட்டு திட்டம். பொதுவாக மழை பெய்தால்தான், விளைச்சல் இருக்கும், அதிக வருமானம் கிடைக்கும். மழை பெய்யாவிட்டால் விவசாயிகளை கவலை அடையாமல் இருப்பதற்காக வந்த திட்டம்தான் பயிர்க் காப்பீடு திட்டம்.

இந்த திட்டம் கடந்த 30ஆ‌ம் தேதியுடன் முடிவதாக இருந்தது. இதை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசு எனக்கு தெரிவித்தது. அதன்படி வருகிற 15ஆ‌ம் தேதி முடிய இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இனி மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எ‌ன்று ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்