சென்னையில் 6 இடங்களில் மேம்பாலம், சுரங்க பாலங்கள் அமைக்கப்பட இருப்பதாக மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார். ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்கட்சித் தலைவர் சைதை ரவி உட்பட உறுப்பினர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். முதலில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பின்னர் அனைத்து கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு மேயர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துப் பேசுகையில், கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள கழிவு நீர்க் குழாய்களின் அளவு அதிகரிக்கப்படுகிறது. 150 மி.மீ. அளவுள்ள குழாய்களுக்கு பதிலாக 250 மி.மீ. அளவுள்ள குழாய்கள் அமைக்க ஆய்வு செய்யப்படுகிறது. மாநகராட்சி மூலம் குடிநீர் வாரிய அதிகாரிகள் மதிப்பீடு தயார் செய்து பெரிய குழாய்கள் அமைக்கப்படும்.
ராயபுரத்தில் உள்ள ராபின்சன் விளையாட்டு மைதானத்தை மேம்படுத்திட 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிராட்வே உள்ள மாடிப்பூங்காவை புதுப்பிக்க ரூ.5.73 லட்சம் மதிப்பீட்டிற்கு ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
சாக்கடைக்குள் மனிதன் இறங்கி சுத்தம் செய்யும் பணியை மனிதன் செய்யாமல் இருப்பதற்காக 1991ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆணையிட்டு இயந்திரங்கள் வாங்கப்பட்டு சாக்கடை மனித நுழை வாயில் சுத்தப்படுத்தப்படுகின்றன. ஒருசில இடங்களில் அவற்றில் ஆட்கள் இறங்கி வேலை செய்யும் நிலை உள்ளது. இதை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வரும்போதுதான் மேம்பாலம், சுரங்கப்பாலம் அமைக்கப்படுகிறது. தற்போது 4 இடங்களில் மேம்பாலங்களும், 2 இடங்களில் சுரங்கப்பாலங்களும் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 6 இடங்களில் புதிதாக மேம்பாலங்கள், சுரங்கப்பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்படும். வடசென்னையில் தங்கசாலை, வியாசர்பாடி கணேசபுரம் ஆகிய இடங்களில் மிகப்பெரிய மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது என்ற மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார். இதைத்தொடர்ந்து 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.