சென்னையில் நடந்த தொழில் முனைவோர் கூட்டத்தில் கலந்து கொண்ட மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்று ஏற்பாடு செய்வது குறித்து தொழில் அதிபர்களுடன் இன்று ஆலோசித்தோம்.
அதன்படி ஒருசில தொழிற்சாலைகளை ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வேறு நாட்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெனரேட்டர்களை பயன்படுத்தவும் அவற்றிற்கான எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியை ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை விலக்கிக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில் இருந்து 300 மெகாவாட் மின்சாரத்தை வாங்க ஏற்பாடு நடந்து வருகிறது. அசாம், அரியானா மாநிலங்களில் இருந்து இந்த மின்சாரம் வாங்கப்படும். இதற்கான ஒப்பந்தம் இம்மாத இறுதிக்குள் செய்யப்படும். தற்போதுள்ள மின் பற்றாக்குறையால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மத்திய அரசிடம் சிறப்பு ஒதுக்கீடாக மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் கேட்டு இருக்கிறோம் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.